"நான் அப்படி பண்ணதால பாலு மகேந்திரா சார் திட்டினார்" - நடிகர் மனோகர் பேட்டி
பல தமிழ் சீரியல்களின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பரிச்சயமானவர் நடிகர் மனோகர். தற்போது 'அன்னம்' சீரியலில் இவர் நடித்து வருகிறார்.
இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் ஒளிபரப்பான 'கதை நேரம்' தொடர் மூலமாகத்தான் இவர் அறிமுகமானார்.
அவரைச் சந்தித்து, அவருடைய கரியரின் பல பக்கங்களைப் புரட்டினோம்.
மனோகர் பேசுகையில், "'அன்னம்' சீரியல்ல மாமா கேரக்டர்ல நடிச்சிட்டிருக்கேன். நான் நிறைய மாமா கேரக்டர்ல நடிச்சிட்டு வர்றேன். அதுனால அந்த மாமா கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்னு சொல்லலாம்.
நான் நிறைய சீரியல்ல நடிச்சிட்டேன். ஆனால், மக்கள் இப்போவரைக்கும் என்னை 'மகாபாரதம்' நாடகத்துல வந்த கர்ணன் கேரக்டரைத்தான் நினைவுல வச்சு பேசுறாங்க.
அந்தச் சீரியலுக்கு ரொம்ப சிரத்தைக் கொடுத்து நடிச்சேன்னு சொல்லலாம். எங்களுடைய இயக்குநர் சிவாஜி சாருடைய 'கர்ணன்' படத்தை அதுக்காகப் பார்க்க சொன்னாரு.
ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்தா ஒரு பயம் வந்திடும்னு பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டேன். காஸ்டியூம், மேக்கப்னு நிறைய விஷயங்களுக்கு ஹார்ட் வொர்க் கொடுத்து அந்தச் சீரியல்ல உழைச்சோம்.
அதுனாலதான் மக்கள் மனதுல இன்னைக்கும் இருக்கேன்னு நினைக்கிறேன்" என்றவர், "எனக்கு தொடக்கத்துல நடிப்பைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், நிறைய படங்கள் பார்ப்பேன். அப்படி படம் பார்க்கும்போது என்கிட்ட நண்பர்கள் 'நீ நடிக்க போகலாம்ல'னு உசுப்பேத்தி விட்டுடாங்க.
அப்புறம்தான் சினிமாவுக்கான முயற்சிகள்ல இறங்குனேன். தொடக்கத்துல ஒய்.ஜி. மகேந்திரன் சார் நடத்தின ஆக்டிங் கோர்ஸ்ல சேர்ந்து படிச்சேன். 
பிறகு கலா மாஸ்டர் நடத்தின கோர்ஸ் படிச்சேன். அங்கதான் எனக்கு 'ஆடுகளம்' நரேனுடைய நட்பு கிடைச்சது. பிறகு நான் வாய்ப்புகள் தேடி போகத் தொடங்கிட்டேன்.
நரேனுக்கு பாலு மகேந்திரா சாருடைய 'கதை நேரம்' சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சுடுச்சு. எனக்கு 'கதை நேரம்' சீரியல் ரொம்ப பிடிக்கும்.
அதுல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கேட்க அடிக்கடி பாலு மகேந்திரா சார் ஆபீஸுக்குப் போய் போட்டோ கொடுத்துட்டு வருவேன்.
ஒரு முறை அடிக்கடி வந்து போட்டோ கொடுக்கணும்னு அவசியம் இல்லை. நாங்களே கூப்பிடுவோம்னு சொல்லிட்டாரு. ஆனா, நான் மறுபடியும் அவர் முன்னாடி போய் நின்னேன். அந்த முறை அவர் கோபப்பட்டு என்னை திட்டிட்டாரு.
பிறகு, லைவ் டப்பிங் செய்கிற ஒரு சீன் வந்திருக்கு. அதுக்கு நடிகர்கள் தேடும்போது, நரேன் என்னைப் பற்றி சொல்லியிருக்கார். அவர் மூலமாகதான் 'கதை நேரம்' சீரியலுக்குள்ள போனேன்.
அந்த சீரியலோட முதல் ஷாட்ல கொஞ்சம் பயமிருந்தாலும், நல்லபடியாகப் பண்ணி முடிச்சுட்டேன். அந்த நேரத்துல வெற்றிமாறன்தான் எனக்கு டைலாக்ஸ் சொல்லுத் தருவார். அப்போவே பாலு மகேந்திரா சாருடைய நம்பிக்கையை அவர் பெற்றிருந்தார்.'கதை நேரம்' ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கும்போதுதான் எனக்கு பையன் பொறந்தான். 
என்னுடைய மனைவி பிரசவ வலிக்காக ஹாஸ்பிடல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும்போதும், நான் படப்பிடிப்புக்கு வந்துட்டேன். பிறகு எனக்கு மகன் பிறந்திருக்கிற தகவலை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்ல வச்சு சொன்னாரு.
அதை கேட்ட பாலு மகேந்திரா சார், 'ஏன்யா, தலை பிரசவத்துக்கு விட்டுட்டு வந்த'னு கேட்டார். பிறகு எனக்காக காம்ப்ரமைஸ் பண்ணி அன்னைக்கு ஷூட் பண்ணினார். இப்படி, 'கதை நேரம்' பற்றி பல விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்" என்றார்.
முழு பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0