விக்ரம் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்; ரெடியான புரோமோ வீடியோ - 'சீயான் 63' அப்டேட்!

Apr 13, 2026 - 19:03
 0
விக்ரம் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்; ரெடியான புரோமோ வீடியோ - 'சீயான் 63' அப்டேட்!

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் 'சீயான்'விக்ரம். 'வீரதீர சூரன்' படத்திற்கு பின் அடுத்து அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ``சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்கான இடைவெளி. என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காக இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன். இப்போது, நான் மிகவும் மதிக்கக்கூடிய இயக்குநர்களுடன், முற்றிலும் மாறுபட்ட நான்கு திரைப்படங்களில் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நான்கு பயணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.'' எனச் சொல்லியிருந்தார். தமிழ் சினிமாவில் வெற்றிகள் கொடுத்த இயக்குநர்கள் பலரிடம் கதைகள் கேட்டு வந்தவர், இப்போது 'இருமுகன்' ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்க ரெடியாகிறார்.

விக்ரம் - ஆனந்த் சங்கர்

'வீரதீர சூரன்' படத்திற்குப் பிறகு 'சீயான் 63' ஆக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமாரின் படம் உருவாகும் என்ற தகவல் பரவியது. இப்போது அதில் மாற்றம் வந்திருக்கிறது. போடி ராஜ்குமாரின் படம் தள்ளிப்போகிறது. இந்நிலையில் விக்ரம் 'இருமுகன்' ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் ஆனந்த் சங்கர் சொன்ன கதையைக் கேட்ட விக்ரம், நெகிழ்ந்ததுடன் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. முதன் முறையாக இந்நிறுவனத்தோடு கைகோக்கிறார் விக்ரம். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கவனிப்பாரென தெரிகிறது. இதற்கு முன் 'பீமா', 'இருமுகன்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவை இரண்டுமே விக்ரமிற்கு பிடித்த படங்களாகும்.

விக்ரம்

சமீபத்தில் இப்படத்தின் புரொமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோவில் நடந்திருக்கிறது. விக்ரமின் அசத்தல் லுக், பேசப்படும் என்கிறார்கள். படத்தின் இதர நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரிடமும் பேசி வருகிறார்கள். விக்ரமின் பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 17-ம் தேதி வருகிறது. அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். அன்று 'சீயான் 63'-ன் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அதே சமயம், புரொமோ வீடியோவை அடுத்த மாதம் பிரமாண்டமாக வெளியிடலாம் என்றும் அனேகமாக மே முதல் வாரத்தில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள் என்ற பேச்சும் உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0